500 நாட்களில் 100 வாக்குறுதிகள்.. கோவைக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Election Manifesto: கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அந்த தொகுதி வேட்பாளர் அண்ணாமலை.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

இதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதன்படி, “என் கனவு நமது கோவை” என்ற தலைப்பில் 100 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அப்போது அண்ணாமலை கூறியதாவது, மேடையில் உள்ள அனைவரின் சாட்சியாக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளேன். கோவையில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோவையாக தான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

கோவைக்கான வாக்குறுதிகள்:

  • கோவையில் நாடாளுமன்றம் உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு, அது மக்கள் குறைதீர்க்கும் மையமாக 6 சட்டமன்ற அலுவலகத்தில் தனித்தனியாக செயல்படும்.
  • காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும்.
  • கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கோவையில் ஐஐஎம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
  • கோவையில் இருந்து ஆன்மிக தளங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
  • கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • கோவை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்.
  • கோவையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம், என்ஐஏ கிளை மற்றும் என்சிபி அலுவலகம் அமைக்கப்படும்.
  • மெட்ரோ பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
  • ஆணைமலை – நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம்.
  • கோவையில் 4 நவயோதய பள்ளிகள் திறக்கப்படும் என 100 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்