முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர்.

நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் மட்டும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது. தமிழகம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவுகள் , அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் என சேர்த்து 21 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.

இதில், அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய அரசுடன் தொடர்பில்லாமல் இந்திய எல்லைக்குள் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் வரலாற்றில் முதன் முறையாக இந்திய தேர்தலில் வாக்களித்துள்ளனர். சுமார் 300 மக்கள் தொகை கொண்டுள்ள இந்த பழங்குடியினாரில் 7 பேர் இந்திய வாக்காளர் அடையாள அட்டை கொண்டு அந்தமான் நிகோபார் தீவில் 411வது வாக்குசாவடியில் வாக்களித்தனர்.

ஷாம்பன் பழங்குடியினர் வெளியுலக தொடர்பை துண்டித்து மழை கிராமங்களில் வசித்து வருபவர்கள். முழுக்க முழுக்க வேட்டையாடி வாழும் இவர்கள், தாவரங்கள் அதன் மருத்துவ குணங்களை நன்கு அறிந்தவர்கள் இவர்கள்.  குரங்கு, பன்றி, முதலை இறைச்சிகளையும் உணவாக உட்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் வெளியாட்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.

ஷாம்பன் பழங்குடியினர் சிலர் மட்டும் தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து வெளியுலக மக்களிடம் தங்களுக்கு தேவையானவைகளை பெற்றுக்கொண்டு, பின்னர் தங்கள் மக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றுவிடுவர்.

இப்படி வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்து வந்த ஷாம்பன் பழங்குடியினர்களுக்கு அவர்கள் மொழி தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்து அவரின் மூலம், தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளித்து பின்னர் ஷாப்பன் பழங்குடியினரில் இருந்து 7 பேர் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் நேற்று முதன் முறையாக இந்திய ஜனநாயக கடமையை ஆற்றினர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.