மேற்கு ஆசியாவில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நுழைவதாக அமெரிக்கா அறிவிப்பு.!

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கு ஆசியாவில் நுழைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட் ஆனது எக்ஸ் பக்கத்தில், “நவம்பர் 5ம் தேதி ஒரு ஓஹியோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க மத்திய கட்டளைப் பகுதிக்கு வந்தது.” என்று தெரிவித்துள்ளது.

அந்த பதிவில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. அதில் கெய்ரோவின் வடகிழக்கு அல் சலாம் பாலத்தின் கீழ், சூயஸ் கால்வாயில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் செல்வது தெரிகிறது. அமெரிக்க கடற்படையில் 72 அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள், 10 விமானம் நிறுத்தும் கப்பல்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சிக் கப்பல் உட்பட 83 அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் உள்ளன.

அதோடு, நான்கு ஓஹியோ-கிளாஸ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் கிங்ஸ் பேஸ், ஜார்ஜியா மற்றும் பாங்கர், வாஷிங்டனில் உள்ளன. இந்த கப்பல்கள் சராசரியாக 77 நாட்கள் கடலில் செயலில் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து 35 நாட்கள் துறைமுகத்தில் பராமரிப்புக்காக நிறுத்தப்டுகின்றன.

ஒவ்வொரு ஓஹியோ-கிளாஸ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாலும் 154 டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். அமெரிக்க கடற்படையின் புதிய தாக்குதல் துணைப்படைகள் கொண்டு செல்வதை விட, இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.

ஒவ்வொரு டோமாஹாக்கிலும் 1,000 பவுண்டுகள் எடையுள்ள வெடிமருந்துகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த கப்பலால் மிக விரைவாக அதிக அளவிலான ஃபயர்பவரை வழங்க முடியும். இதனால் அமெரிக்காவின் எந்த எதிரியும் இந்த ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

ஓஹியோ வகை நீர்மூழ்கிக் கப்பலின் வருகை குறித்த அறிவிப்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மேற்கு ஆசியாவில் உள்ள துருக்கி, ஈராக், இஸ்ரேல், மேற்குக் கரை, ஜோர்டான் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.