சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி – தீபக் தவாலிகர் அறிவிப்பு..!

2022 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி)  திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தலைவர் தீபக் தவாலிகர் தெரிவித்தார்.

கோவாவில் பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுடன் (டிஎம்சி) கூட்டணியில் போட்டியிடப் போவதாக அறிவித்தது. இன்று நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அக்கட்சி தலைவர் தீபக் தவாலிகர் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபக் தவாலிகர், திரிணாமுல் காங்கிரஸுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மத்தியக் குழு உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக உட்கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் செல்வது என முடிவு செய்துள்ளோம். நாங்கள் திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், வேறு சில நல்ல கட்சிகளும் பின்னர் எங்களுடன் சேரலாம்.

ஆம் ஆத்மி கட்சி வரலாம், சிவசேனா வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். யாருக்கு தெரியும்? எந்தக் கட்சிகள் பின்னர் எங்களிடம் வரக்கூடும் என்று இப்போது கூற முடியாது என்று தவாலிகர் கூறினார். நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், தேவை ஏற்பட்டால், பாஜக அல்லாத கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போட்டியிட 12 இடங்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும், ஆனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான  ஆலோசனை இனி தொடங்கும் என்றும் தவாலிகர் கூறினார். டிசம்பர் 13 ஆம் தேதி கோவாவுக்கு மம்தா பானர்ஜியின் திட்டமிடப்பட்ட பயணத்தின் போது இதுகுறித்து விவாதிக்கப்படலாம்  என்றும் அவர் கூறினார்.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எந்தக் கட்சியில் இருந்து வருவார் என்று கேட்டதற்கு, தவாலிகர், “இது குறித்து உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்” என்றார். 50-60 சதவீத வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை என்று எங்கள் ஆய்வுகள் காட்டுகின்றன. கோவா மக்களுக்கு ஒரு புதிய மாற்றத்தை வழங்க விரும்புகிறோம் என்று தவாலிகர் கூறினார்.

2017-ம் ஆண்டு எங்கள் ஆதரவுடன் அரசு அமைந்தது. அதன் பிறகு  இந்தக் கட்சி எப்படி நடத்தியது..? எங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்கள், பிறகு எங்களை தூக்கி எறிந்தார்கள். இந்தக் கட்சி எங்களை எப்படிப் பயன்படுத்தியது என்று யோசித்த பிறகே, இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறினார்.

2019 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி தலைவர் சுதின் தவாலிகரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.  2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கு மூன்று எம்எல்ஏக்கள் இருந்தனர். மேலும் அது கோவாவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆதரவளித்தது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மூத்த தலைவர் சுதின் தவாலிகர் துணை முதல்வரானார்.

இருப்பினும், கடந்த 2019 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியிலிருந்து இரண்டு மற்றும் காங்கிரஸிலிருந்து 10 பேர் பாஜகவில் இணைந்தனர். இதையெடுத்து  2019 ஆம் ஆண்டில், சுதின் தவாலிகர் அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்கினார். சுதின் தவாலிகர் இப்போது மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் ஒரே எம்எல்ஏவாக உள்ளார்.

author avatar
murugan