சாதனை : சூரியனை அடைந்த நாசா விண்கலம்…!

பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் வெற்றிகரமாக சூரியனின் வளி மண்டலத்திற்குள்  நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது.

நாசா விஞ்ஞானிகள் முதன் முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை தயாரித்துள்ளனர். இந்த விண்கலம் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பார்க்கர் விண்கலனை மீண்டும் மீண்டும் சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி அதை கடந்து செல்ல வைப்பதுதான்.

இந்நிலையில் இந்த பார்க்கர் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இது குறித்து நாசா கூறுகையில், வரலாற்றில் முதன்முறையாக ஒரு விண்கலம் சூரியனை தொட்டுள்ளது.

நாசா கூற்றுப்படி, விண்கலம் ஏப்ரல் 28 அன்று சுமார் 2 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பமான சூரியனின் வளிமண்டலத்தில் வெற்றிகரமாக நுழைந்தது. பார்க்கர் சோலார் புரோப் வெற்றிகரமாக சூரியனின் வளி மண்டலத்திற்குள்  நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது.

சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும், இது அதிக வெப்பத்தை தாங்க கூடிய  சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்றும்  கூறப்படுகிறது.

இந்த பார்கர் சோலார் புரோப் விண்கலம், சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்டது. இது சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில், சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.