#IPLBreaking: “மரண படுக்கையில் குடும்ப உறுப்பினரைக் கொண்ட ஒருவர் எப்படி கிரிக்கெட்டை ரசித்து பார்க்க முடியும்”-ஆடம் ஸாம்பா..!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா செவ்வாய்க்கிழமை நடந்த பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து வீரர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி செவ்வாய்க்கிழமை தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து ஆடம் ஸாம்பா கூறுகையில்,”ஆறு மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியானது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.அதனால் இந்த ஐபிஎல் போட்டிகளையும் துபாயில் நடத்தியிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இருப்பினும்,அதில் நிறைய அரசியல் காரணங்கள் உள்ளன.

கொரோனா பரவல் இருந்தாலும் நாங்கள் இப்போது ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்தான் இருக்கிறோம்,எனினும் இது இந்தியா என்பதால் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். ஏனெனில்,கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.மேலும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் குடும்ப உறுப்பினரைக் கொண்ட ஒருவர் எப்படி கிரிக்கெட்டை ரசித்து பார்க்க முடியும்.

இதன் காரணமாகவே,எனக்கு பயிற்சிக்கு செல்ல ஆர்வம் இல்லாமல் இருந்தது.அதனால் பயிற்சிக்கு தாமதமாக சென்றேன்.அதுமட்டுமல்லாமல், வெளிநாடு செல்பவர்களின் விமானங்கள் தடை செய்யப்படுகிறது. எனவே,நாட்டிற்கு திரும்ப இதுவே சரியான நேரம் என்று எனக்கு தோன்றியது”,என்று கூறியுள்ளார்.