தேசிய கட்சியோடு கைகோர்க்கும் நடிகர் விஜய்.? மறுப்பு தெரிவித்த முக்கிய நிர்வாகி.! 

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிமுக தலைவர்களை ஒரே கூட்டணியில் இருந்த பாஜகவினரே தொடர்ந்து விமர்சித்து வந்ததால் , பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் தேசிய அளவில் பாஜக தலைமையில் அமைந்து இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில்(NDA) இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவின் ‘கூட்டணி முறிவு’ முடிவு , தமிழக பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.  இந்த கூட்டணி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர்களிடம் விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு செய்தி நிறுவனம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA)  வலுப்படுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், இதில் நடிகர் விஜயின் , மக்கள் இயக்கதிடமும் ஆதரவு கேட்டுள்ளார் என்றும், அண்ணாமலையின் கூட்டணி முறிவு முடிவுக்கும், அவரது நேர்மைக்கும் விஜய் பாராட்டு தெரிவித்தது போலவும் செய்திகளை வெளியிட்டது.

இதனை அடுத்து, விஜய் பாஜகவுடன் இணைந்து தமிழக அரசியலில் களமிறங்க உள்ளாரா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை மறுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், இன்றைய (அக்டோபர் 9) <தனியார் செய்தி நிறுவனம்> நாளிதழில் தளபதி விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி. தளபதி விஜய் அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு

<தனியார் செய்தி நிறுவனம்> நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு தளபதி அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்,
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.