அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு.? கலெக்டரிடம் புகார் அளித்த மாடுபிடி வீரர்.!

கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

கீழக்கரை ஜல்லிக்கட்டு – இன்று முன்பதிவு தொடக்கம்.!

இதனை தொடர்ந்து, தான்தான் அதிக காளைகளை அடக்கியதாகவும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அபி சித்தர் முன்வைத்து இருந்தார். இதுகுறித்து தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அபி சித்தர் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கார்த்திக்கு 3 சுற்றுகள் வரை விளையாட அனுமதிக்கப்பட்டது. இறுதி சுற்றில் தான் அதிக காளைகளை அடக்கினேன். ஆனால் , முதற்பரிசு கார்த்திக்கு வழங்கப்பட்டது. எனக்கு முதற்பரிசு கார் தேவையில்லை . ஆனால் நான் தான் வெற்றியாளர் என அறிவித்தால் மட்டும் போதும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் அபி சித்தர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாவும், ஜனவரி 24இல் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இதுகுறித்து மனு அளிக்க உள்ளதாகவும் அபி சித்தர் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.