ஈஷாவில் ஆட்டம், பாட்டத்துடன் களைக்கட்டிய இருளர் பழங்குடி மக்களின் இசை நிகழ்ச்சி!

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நேற்று இரவு (மார்ச் 8) கோலாகலமாக நடைபெற்றது.

ஆதியோகி முன்பு நடந்த இந்த கலை நிகழ்ச்சியில் தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, முள்ளாங்காடு, வெள்ளப்பதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர். தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து அரங்கை அதிர செய்தனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவிற்கு வந்திருந்த மக்கள் நம் பழங்குடி மக்களின் இசையை மெய்மறந்து ரசித்தனர். முன்னதாக, ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ஆதியோகி திவ்ய தரிசனம் முடிந்த பிறகு மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மார்ச் 5-ம் தேதி தொடங்கிய 4 நாள் நாட்டுப்புற கலை திருவிழா நேற்றுடன் (மார்ச் 8) நிறைவு பெற்றது. மார்ச் 5-ம் தேதி கரகாட்டம் மற்றும் காவடியாட்டமும், 6-ம் தேதி கட்டைக்கூத்தும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்