அதிர்ச்சி..!மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு;59 வயதான கொரோனா நோயாளி பலி..!

உத்திரப்பிரதேச மாநிலத்தின்,காசியாபாத்தில்,மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதித்த 59 வயதான கொரோனா நோயாளி உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து,வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவத் தொடங்கியது.

இந்நிலையில்,உத்திரப்பிரதேசத்தின்,காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத் நகர் பகுதியில் வசிக்கும் 59 வயதான ராஜேஷ் குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக,அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர்,எண்டோஸ்கோபி பரிசோதனை செய்ததில் ராஜேஷ் குமாருக்கு,மஞ்சள்,கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து,அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து,அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கூறுகையில்,”ராஜேஷ் குமாருக்கு, பூஞ்சை பாதிப்பானது அவரது மூளைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்,அவரது தாடையின் பாதி பகுதி அகற்றப்பட்டது.எனவே,அவருக்கு நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் வகையில் சிகிச்சை வழங்கப்பட்டது.இருப்பினும்,அவர் உயிரிழந்தார்”,என்று கூறினார்.