சி.பி.ஐ. அதிரடி ….. கார்த்தி சிதம்பரம் கைது!

கார்த்தி சிதம்பரத்தை , ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக முதலீடுகளை பெற உதவியது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து 305 கோடி நிதி பெற உதவியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

2007ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ப.சிதம்பரம்  இருந்தபோது, அவரது அதிகாரத்தை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்தி, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டைப் பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றுத் தந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டன்ட் நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த வழக்குகளில் ஏற்கெனவே, கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தின் பங்குதாரர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கடந்த 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தபோது, கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையின் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை 7 மணியளவில் லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்த சி.பி.ஐ. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளதால், கார்த்தி சிதம்பரம் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment