இறந்த மருத்துவர்களின் பெயரை பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரித்து கவுன்சிலில் பதிவு செய்த போலி டாக்டர்கள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது

சென்னை : இறந்த மருத்துவர்களின் பெயரை பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரித்து கவுன்சிலில் பதிவு செய்த போலி டாக்டர்கள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஹோமியோபதி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் தங்கள் மருத்துவ சான்றிதழை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், கவுன்சிலில் பதிவான பல மருத்துவர்கள் போலியானவர்கள் என தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் ராஜசேகரன் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தினார். அப்போது கடந்த 2010-12ம் ஆண்டில் இறந்த மருத்துவர்களின் சான்றிதழ்களை திருத்தி அதில் பெயர் மற்றும் முகவரிகளை மாற்றி தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது தெரியவந்தது.

இது குறித்து அப்போது தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளராக இருந்த சவுந்தரராஜன், தலைவராக இருந்த மருத்துவர் ஹனிமேன், உறுப்பினர்களாக இருந்த மருத்துவர் ரங்கசாமி, மருத்துவர் பரமேஸ்வரன் நம்பியார் உட்பட 15 பேர் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பதிவாளர் ராஜசேகரன் உரிய ஆதாரங்களுடன் கடந்தாண்டு ஜனவரி 11ம் தேதி அறிக்கை அனுப்பினர். அந்த அறிக்கையின்படி தமிழக அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பதிவாளருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி அனுமதி அளித்தது.

இதைத் ெதாடர்ந்து கவுன்சில் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறந்தவர்களின் பெயரில் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமேன் உட்பட 15 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கோயம்புத்தூர் ரவிக்குமார், கடலூர் வேல்முருகன், திருப்பூர் தரன், தேனி அனில்குமார், மதுரை குமரன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் போலி சான்றிதழ் பெற்ற மற்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். அவர்களையும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Castro Murugan

Leave a Comment