‘ராமாயண யாத்திரைக்கு மதுரையில் இருந்து 14-ஆம் தேதி ரயில் புறப்படுகிறது..!!

ராமாயணம் புராணத்தில் வரும் நிகழ்வுகள் நடந்த இடங்களை பார்வையிட செல்லும் சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து வரும் 14-ந்தேதி புறப்படுகிறது. 
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) தென்மண்டல கூடுதல் பொதுமேலாளர் எல்.ரவிக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமாயண நிகழ்வுகள் நடந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும் வகையில் ‘ராமாயண யாத்திரை’ க்கான சிறப்பு ரெயில், வரும் 14-ந்தேதி (புதன்கிழமை) மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்டிரல், ஹம்பி, நாசிக், சித்திரைக்கூடம், அயோத்தியா நந்திகிராமம் வழியாக சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக்புரிக்கு (நேபாளம்) செல்கிறது. பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் வழியாக மீண்டும் மதுரையை வந்தடைகிறது. 15 நாட்கள் கொண்ட இந்த யாத்திரை செல்ல ஒருவருக்கு கட்டணம் ரூ.15 ஆயிரத்து 830 ஆகும்.

இதேபோல், மதுரையில் இருந்து டிசம்பர் 2-ந்தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரெயில் ஐதராபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை மற்றும் கோவாவுக்கு இயக்கப்படுகிறது. 10 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.10 ஆயிரத்து 100 கட்டணமாகும். மதுரையில் இருந்து டிசம்பர் 14-ந்தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரெயில் விழுப்புரம், எழும்பூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக கோவாவுக்கு செல்கிறது. 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்து 725 கட்டணமாகும்.

இதேநாளில் புறப்படும் மற்றொரு சுற்றுலா ரெயில் எழும்பூர் வழியாக கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், தர்மசாலா மஞ்சுநாதர் மற்றும் குக்கே சுப்பிரமணியா உள்ளிட்ட கோவில்களை தரிசனம் செய்யலாம். 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.6 ஆயிரத்து 930 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா கட்டணத்தில் ரெயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment