என்னமா இப்படி பண்றீங்களே ? இந்தியாவில் 50% பேர் முகக்கவசம் அணிவதில்லை

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது மிகமுக்கிய கவசமாக மக்களை பாதுகாப்பது முகக்கவசமே.

இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து 2000 பேருக்கு 25 நாட்கள் என்ற அடிப்படையில் சுகாதார அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதில் ஒரு நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அவரால் ஒரு மாதத்தில் 406 பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

சமூக இடைவெளியே மிக முக்கியமான சமூக தடுப்பூசி என்று தெரிவித்துள்ளனர்.  இது குறித்து, கொரோனா தொற்றை குறித்த வழக்கமான மாநாட்டில் சுகாதார அமைப்பின் அதிகாரி 100 பேரில் 7 பேர் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள் என்றும் மற்றவர்கள் கன்னம், வாய், கழுத்து போன்ற இடத்தில் அணிவதாகவும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைப்பின் இணை செயலாளர் வியாழக்கிழமை அன்று முகக்கவசம் தொடர்பான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

இதில் இந்தியாவில் 50%பேர் முகக்கவசம் அணியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மற்ற 50% பேரில் 14% மக்கள் மட்டுமே சரியாக முகக்கவசத்தை அணிகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதனால் இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்க நாம் அனைவரும் கடுமையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.