இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை..!66 ஆயிரம் டாலர் அபராதம்…!

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து  செய்து வருகின்றன.

இதனையடுத்து,ஆஸ்திரேலிய நாடும் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது.இருப்பினும்,இந்தியாவிலிருந்து நேரடியாக செல்லாமல் மற்ற பிற நாடுகளின் வழியாக மக்கள் பலபேர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸாம்பா மற்றும் கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து வேறு நாடுகளின் வழியாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, தனது சொந்த நாட்டு மக்களாக இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.மேலும்,இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து இந்த நடைமுறையானது அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.