கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

blackfungus

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தற்பொழுது பலியாகியுள்ளனர்.கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயதுடைய கண்ணன் என்பவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்து குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேபோல 54 வயதுடைய பண்ருட்டி தட்டாஞ்சாவடி சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், வேம்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்த 55 வயதுடைய ரவிக்குமார் என்பவர், 45 வயதுடைய சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த மீனா ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ள நிலையில் இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.