கேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு!

முதல் கட்டமாக கேரளா மாநிலத்திற்கு 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸை ஒழிக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள  சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பின், வருகின்ற 16ம் தேதி முதல் நாடு முழுவதிலும் தடுப்பூசி போடக்கூடிய பணிகள் துவங்கப்படுகிறது. தற்பொழுது புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கூறியுள்ள கேரளா சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா  அவர்கள், கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ள 4,33,500 தடுப்பூசிகளில் திருவனந்தபுரத்திற்கு 1,34,000 தடுப்பூசிகளும், எர்ணாகுளத்துக்கு 1,80,000 தடுப்பூசிகளும், கோழிக்கோட்டுக்கு 1,19,500 தடுப்பூசிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். மேலும், கோழிக்கோட்டில் இருந்து 1,500 தடுப்பூசிகள் மகேவுக்கு  விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 133 தடுப்பூசி மையங்களில் முதல் கட்டமாக வருகிற சனிக்கிழமை முதல் கேரளாவில் தடுப்பூசி போடப்படும் எனவும், அனைத்து மையங்களிலும் தடுப்பூசிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசி போடுவதற்காக 3 லட்சத்து 62 ஆயிரத்து 870 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal