மும்பை கட்டிட விபத்து..பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு !

தொடர் மழை காரணமாக மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 10 பேர் உயிரிழந்தனர்
மும்பையில் கடந்த  29-ந் தேதி பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மும்பை பெருநகரம் வெள்ளத்தில் மிதந்தது.
இந்த நிலையில், தென்மும்பையில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடம் 117 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
உயர்ந்து நின்ற இந்த கட்டிடம் நேற்று காலை 8.35 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. மாடிகள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன. இந்த பயங்கர கட்டிட விபத்தில், கட்டிடத்தில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் பலர் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் 37 பேர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.
நேற்று வரை 27 பலியாகியிருந்த நிலையில்  தற்போது பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment