ஒடிசா உதாலா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஒடிசா மாநிலத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதுமுள்ள அணைத்து மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒடிசாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளத்துடன், தினசரி பாதிப்பும் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓடிசாவில் 9,793 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் உதாலா துண சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை சிறைக்கைதிகளுக்கு வழக்கம்போல மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் சில கைதிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நகர மருத்துவமனைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 79 சிறைக்கைதிகளுக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறை நிர்வாக அதிகாரி வித்யாதர் அவர்கள் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் கைதிகளை கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும், சிறைச்சாலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal