திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை – அச்சம் இருந்தால் வர வேண்டாம்!

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த பின்பும் வருவதற்கு அச்சமாக இருந்தால் திரையரங்குகளுக்கு வரவேண்டாம் என நடிகை குஷ்பு ட்விட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவ்வப்போது சில தளர்வுகளையும் கொடுத்து வருகிறது. தற்பொழுது பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக முதல்வர் அனுமதி கொடுத்ததற்காக மிகப்பெரிய நன்றி எனவும், அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கக்கூடிய துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும்; நல்ல பொழுதுபோக்கை மீண்டும் தரும் எனவும் கூறியுள்ளார். பாதுகாப்பு குறித்து கவலைப்படுவோருக்கு, ஒரு சில இடங்களைத் தவிர எங்கும் திரையரங்குகளில் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதே சமயம் திரையரங்குகளும் விதிமுறைகளை பின்பற்றும், திரையரங்குகளுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு அதை பின்பற்றுவோம் எனவும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்குவது குறித்து வேறு அபிப்ராயங்கள் மற்றும் அச்சம் கொண்டவர்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான். அச்சம் இருந்தால் போகாதீர்கள், உங்களை அச்சத்தை புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள் எனவும், நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் புதிய தோற்றத்தினை விசிலடித்து வெடி வெடித்து காண காத்திருக்கிறேன் எனவும், ஈஸ்வரனின் சிலம்பரசனை காண காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal