2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் – தேசிய குற்ற ஆவண காப்பகம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நிகழ்ந்த குற்ற நிலவரம் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும், அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 328 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளை விட கடந்த ஆண்டு மிக அதிக அளவில் விபத்துக்களால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் தப்பித்து சென்றுள்ளதாகவும், ரயில் விபத்துகளால் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ அஜாக்கிரதை காரணமாக 133 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் கவனக்குறைவு காரணமாக 51 பேரும் பலியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதர கவனக்குறைவு காரணமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal