பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..!

பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப் பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 850 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு பாடப்பிரிவில் மாணவர்கள் சேருவது குறைவாக இருந்தது. இதனால் 6-ம் வகுப்பில் தெலுங்கு பாட பிரிவில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெலுங்கு இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

மேலும் அத்திமாஞ்சேரி பேட்டை சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வர போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்களது சொந்த செலவில் இலவச சைக்கிள்களை வாங்கி தெலுங்கு ஆசிரியர்கள் வழங்கினர்.

6-ம் வகுப்பு தெலுங்கு பாடபிரிவில் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தேவ சகாயம் முன்னிலையில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து தெலுங்கு ஆசிரியர்கள் கூறுகையில், “தற்போது தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் சூழல் இருப்பதால், கிராம பகுதிகளில் இருந்து மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நோக்கத்தோடு இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment