“ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்?” – சொல்கிறார் ராமதாஸ்!

தேர்தல் சீர்திருத்தங்களின் மையக்கரு தேர்தலில் பண பலத்தை ஒழிக்க வேண்டும்; நல்லவர்கள் நாடாள வேண்டும் என்பது தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்? என்றும்,அவ்வாறு தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் தேர்தலில் பண பலம் ஒழியும்,நியாயமாக தேர்தல் நடக்கும்,நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்றும்,இது நிச்சயம் ஒரு நாள் நடக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.ஆனால், தமிழ்நாட்டிலும் வேறு சில மாநிலங்களிலும் பணம் தான் ஜனநாயகத்தில் இறுதி எஜமானராக உள்ளது. இந்த நிலையை மாற்றினால் தான் நாட்டில் ஜனநாயகம் தழைக்கும். மக்களும் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களாக நிலைப்பார்கள்.
ஆனால், இதற்கெல்லாம் பெரும் தடையாக இருப்பது இந்திய தேர்தல் முறை. இந்தியத் தேர்தல் முறை பண பலமும், அதிகார பலமும் படைத்தவர்களுக்குத் தான் எப்போதும் சாதகமாக இருந்து வருகிறது. அண்மைக்காலமாக இது இன்னும் மோசமடைந்திருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். தேர்தலில் 10 ரூபாய் கூட செலவழிக்காமல் நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும். இது சாத்தியமாக வேண்டும் என்றால் தேர்தல்கள் எவ்வாறு நடக்க வேண்டும்?
கீழ்க்கண்டவாறு தான் தேர்தல் நடக்க வேண்டும்.தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.30.80 லட்சம் செலவழிக்க முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 விழுக்காட்டினரால் இந்த அளவு பணத்தை செலவழிக்க முடியாது. அதே நேரத்தில் சில கட்சிகளின் வேட்பாளர்களால் ரூ.30 கோடி வரை செலவழிக்க முடியும். அதனால் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
இதைத் தடுக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் தேர்தலுக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேர்தலுக்கான செலவை அரசே ஏற்றுக் கொள்வது என்றால், ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரசு ரூ.30 லட்சம் பணம் கொடுக்க முடியாது. மாறாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தொலைக்காட்சிகளிலும், பிற டிஜிட்டல் தளங்களிலும் பிரச்சாரம் செய்வதற்கு இலவசமாக வாய்ப்பளிப்பது, ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறிப்பிட்ட அளவில் துண்டறிக்கைகளை அச்சிட்டு வழங்குவது ஆகியவை தான் அரசின் சார்பில் செய்யப்படும் செலவாகும்.
இத்தகைய சூழலில் தேர்தல் நடைபெறும் எந்த பகுதிகளிலும் சுவர் விளம்பரங்கள் இருக்காது. அனைத்து பகுதிகளிலும் சுவர்கள் தூய்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். குழந்தைகள், முதியவர்கள், மாணவர்கள் ஆகியோரை பாதிக்கும் வகையிலும், அனைவரின் காதுகளையும் செவிடு ஆக்கும் வகையிலும் ஆட்டோக்காளில் ஒலிப்பெருக்கிகளை கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்யும் வழக்கம் ஒழிக்கப்படும்.
மது, பிரியாணி இல்லை:
வாக்கு சேகரிக்க ஒரு வேட்பாளருடன் அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே செல்வார்கள். அவர்களுக்கு தினக்கூலியாக பணம் தருவது, மது வாங்கித் தருவது, பிரியாணி வழங்குவது போன்ற எதுவும் நடக்காது. வேட்பாளர் விரும்பினால் அவரது சொந்த செலவில் தன்னுடன் வரும் சிலருக்கு தேனீர் வாங்கித் தரலாம். அவ்வளவு தான். அதைத் தாண்டி தேர்தலில் பணம் விளையாட வாய்ப்பே இல்லை.
பூத் செலவுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் கொடுமையும் இருக்காது. பூத் செலவுக்கே பணம் செலவழிக்க மாட்டார்கள் எனும் நிலையில், ஓட்டுக்கு பணம் தருவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவே முடியாது. வேட்பாளர்கள் தரப்பில் மட்டுமின்றி மக்களின் மனநிலையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
சுயேட்சைகள் இல்லை:
தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு எவருக்கும் மறுக்கப்படக் கூடாது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் உரிமை கேலிக் கூத்தாகி விடக் கூடாது. சுயேட்சையாக போட்டியிடுபவர்களில் பலர் மற்றவர்களின் கைப்பாவையாகத் தான் செயல்படுகின்றனர். உண்மையான உணர்வுடன் களமிறங்குபவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், வல்லுனர் குழு அமைத்து பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்த வேண்டும்.
வெறிச்சோடிய மதுக்கடைகள்:
இதையெல்லாம் விட இன்னொரு பெரிய மாற்றமும் நிகழ வேண்டும். இப்போது தேர்தல் என்றால் மது விற்பனையை தடுப்பதற்காக மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், இது போதாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.
உலகத்திலேயே மிகவும் வலிமையான தேர்தல் அமைப்புகளைக் கொண்ட நாடுகள் அமெரிக்காவும், நியூசிலாந்தும் தான். அதனால் தான் அந்த நாடுகளில் நிலையான அரசுகள் அமைகின்றன; நேர்மையான நிர்வாகம் நடைபெறுகிறது.
தேர்தல் நடைமுறை வலிமையாக இருந்தால் மட்டுமே நிலையான, நேர்மையான ஆட்சி அமையும் என்பதை உணர்ந்து கொண்ட பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, இஸ்ரேல், தைவான் ஆகிய நாடுகள் தேர்தல் சீர்திருத்தங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் சீர்திருத்தங்களின் மையக்கரு தேர்தலில் பண பலத்தை ஒழிக்க வேண்டும்; நல்லவர்கள் நாடாள வேண்டும் என்பது தான்.
தேர்தல் சீர்திருத்தங்கள்:
இந்தியாவில் அத்தகைய சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியாதா?
நிச்சயமாக முடியும். ஆனால், அதை ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் தேர்தல் முறையை சீர்திருத்துவதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக எம்.எஸ்.கில் இருந்த காலத்தில் அளிக்கப்பட்ட 48 பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் கிடந்தன. அவற்றில் சில திரும்பப் பெறப்பட்டன… சில நிறைவேற்றப்பட்டன… சில நிராகரிக்கப்பட்டன. இன்றைய நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட 40 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டிருக்கின்றன.
இன்னொருபுறம் இந்திய சட்ட ஆணையம் கடந்த 2015 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த 255-ஆவது அறிக்கையில் ஏராளமான சீர்திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது குறித்து கடந்த 18.02.2020 அன்று அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் மத்திய சட்டத்துறை அதிகாரிகளை ஆணையத்துக்கு அழைத்துப் பேசினார்கள். ஆனால், அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 40 பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானவை தேர்தலில் பண பலத்தை தடுப்பது, பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதையும், ஒரு கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுவதும் தான். இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் தேர்தலில் பண பலம் ஒழியும். நான் மேலே குறிப்பிட்டதைப் போன்று நியாயமாக தேர்தல் நடக்கும். நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள். இது நிச்சயம் ஒரு நாள் நடக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். இந்த இலக்கை நோக்கி நாம் உழைப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.