‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனருக்கு சவால் விட்ட மாணவர் அமைப்பினர்!உங்கள் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தைப் பார்ப்பீர்களா?காவல் ஆணையரிடம் மனு

 மாணவர் அமைப்பினர்,’இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநர், தயாரிப்பாளர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். உங்கள் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தைப் பார்ப்பீர்களா? என மாணவர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

‘ஹரஹர மஹா தேவகி’ படத்தை இயக்கிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கிய படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்தும், இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் படத்தை தயாரித்த, இயக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளது தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற தமிழ்ப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், ஏற்கெனவே பெண்களை அவதூறாக சித்தரித்து எடுத்தவர் மீண்டும் பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை எடுத்துள்ளார்.

இவரின் இந்தச் செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம், கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இப்படி இழிவாக எடுக்கும் செயலை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், இது பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு. உடனடியாக இந்தப் படத்தை தயாரித்த, இயக்கிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்தப் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். தணிக்கைக்குழு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. படத்தை பெருவாரியான சிறுவர்களை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு தீய வழியில் கொண்டுசெல்வது வருத்தத்தை தருகிறது. கலைத்துறை என்பது மக்களின் புரட்சிக்கான அடுத்த ஆயுதம்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு திரைத்துறையில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்தத்துறையை தவறான பாதைக்கு கொண்டுசெல்வதை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் அளித்த மாணவர் அமைப்பினர் கூறியதாவது:’ஹரஹர மஹாதேவகி’  படம் எடுத்தபோதே அந்த இயக்குநரை எச்சரித்தோம். ஆனால் அவர் தொடர்ந்து இதே பாணியில் படம் எடுத்து வருகிறார். பெண்களை கேவலமாக சித்தரித்து எடுக்கும் இயக்குநர் வீட்டிலும் பெண்கள் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கிறார்கள்.

நாங்கள் கேட்கிறோம். அவர்களோடு சென்று இந்தப்படத்தை இயக்குநர் பார்ப்பாரா?, சமூகத்தில் ஆயிரம் பிரச்சினை இருக்கும் போது இது ஒரு பிரச்சினையா என்று கேட்கலாம். இதுவும் பிரச்சினைதான். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது இப்படித்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment