காவிரி நதிநீர் பங்கீடு:இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

இன்று காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாதென கர்நாடகம் மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை கடந்த 3-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாள்கள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, மே 8-ஆம் தேதி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகாவில் குறைவான தண்ணீரே இருப்பதாகவும், ஏற்கனவே தமிழகத்துக்கு ஏப்ரல் மாதம் வரை 116 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறியுள்ள அம்மாநில அரசு, தண்ணீரை திறக்க மறுத்துள்ளது. இதுகுறித்து மனுவை அம்மாநில அரசு நேற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், இதுவரை 1.4 டிஎம்சி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், மே மாதம் வரை 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை சுலபமாக வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் முன்வைத்துள்ள வாதத்தின் இடையே, காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment