இன்று பிரணாப் முகர்ஜி நினைவு நாள்;”அவர் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்” – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள்,கடந்த 31.08.2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில்,அவர் இறந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில்,அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில்,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்,மறைந்த பிரணாப் முகர்ஜி அவர்களின்,முதல் நினைவு சொற்பொழிவில் கூறியதாவது:

“இந்திய ஜனாதிபதியின் மிக உயர்ந்த அரசியலமைப்பு இடத்தை அடைவதற்கு முன்பு, அவர் 5 தசாப்தங்களுக்கு மேலாக நீண்ட மற்றும் புகழ்பெற்ற அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்.

அவர் மத்திய அரசாங்கத்தின் அமைச்சகங்களில் பல முக்கிய பதவிகளை வகித்தார். அவர் வகித்துள்ள அனைத்து நிலைகளுக்கும், அவர் மகத்தான ஞானம், ஆழ்ந்த அறிவு, பொது வாழ்க்கை மற்றும் தலைமைத்துவ திறன்களின் விரிவான அனுபவம் மூலம் பரந்த அளவிலான பிரச்சினைகளில் அரசாங்கத்தின் முக்கியமான முடிவுகளை முன்னெடுத்து வந்தார்”,என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து,பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில்:”பிரணாப்முகர்ஜி அவர்கள் பங்களாதேஷின் உண்மையான நண்பர் மற்றும் துணை கண்டத்தின் சிறந்த அரசியல் சின்னம். இந்த உயரிய ஆளுமையின் நினைவு நாளில் அவரது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். பங்களாதேஷ் மீது பிரணாப் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார்”,என்று தெரிவித்துள்ளார்.