கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என இணையத்தில் வைரலான வீடியோ! வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்!

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளார் . இவர் மதுரை நகரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவருக்கு சளி, இருமல், சோர்வு ஆகியவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,  சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை பெற்ற பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் அவரையும், அவரது தாயாரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் 2 மணி நேரங்கள் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் சரக்கு வாகனம் ஒன்றை தயார் செய்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் சோர்வாக அமர்ந்திருப்பது சரக்கு வாகனத்தில் ஏறிச் செல்வது போன்றவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இல்லை என கூறி அவரையும் அவரது தாயாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் மக்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வீட்டிற்கு வந்த முஸ்தபா தன்னை குறித்து இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்து, மனவேதனை அடைந்து, நேற்று காலை சென்னையிலிருந்து நெல்லைக்கு சீனி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்டு, மதுரை ரயில்வே துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.