திருவள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சி! பொங்கல் அறுவடைக்கு 57 ஆயிரம் ஏக்கர் தயார்….

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு பொங்கல் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.  57ஆயிரம் ஏக்கரில் விளைந்துள்ள நெல் மற்றும் சிறுதானிய வகைகள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகில்…. திருவள்ளூர் மாவட்டத்தில்… என்று வீட்டுமனைகளாக மாற்றி கூறு போட்டு விற்கப்பட்ட விவசாய நிலங்கள் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்சியான விளைச்சலை கொடுத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு கனமழை வெள்ளம்…. 2016ல் புரட்டி போட்ட வர்தா புயல் என கடுமையான பாதிப்புக்குள்ளான திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் அறுவடைக்கு என்று 57 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் சிறுதானிய வகைகள் பயிரிடப்பட்டிருந்தன.பருவ மழையால் செழிப்பான விளைச்சலை கண்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகமாக விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
 
இங்கு என்.எல்.ஆர் ரகம், 1010 குச்சி ரகம், 5151 நெல் ரகம், ஜெ.ஜெ.எல்., ஏ.டி.டி. நெல் ரகம், 39 எனப்படும் சிவப்பு பொன்னி, பி.பி.டி., எனப்படும் பாபட்லா பொன்னி நெல் ரகம் போன்ற நெல்ரகங்கள் 90 சதவீதம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது
 
திருவள்ளூர், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, தண்டலம் சுற்றுவட்டாரங்களில், புத்தாண்டு முதல் நெல் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. கும்மிடிபூண்டி, பெரிய பாளையம், புதுவாயல், பூச்சி அத்திப்பட்டு, வெள்ளானுர் சுற்றுவட்டாரங்களில், சனிக்கிழமை முதல், அறுவடை தொடங்கி உள்ளது. நெல் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சிறிய, பெரிய இயந்திரங்கள் மூலம், நெல் அறுக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது
பொன்னேரி, மீஞ்சூர், ஆண்டார்குப்பம், சோழவரம் சுற்றுவட்டாரங்களில், பொங்கலன்று அறுவடை தொடங்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கைவிட்ட இயற்கை தங்களுக்கு இந்த ஆண்டு கைகொடுத்து இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஒரு ஏக்கருக்கு, 20 முதல் 30 மூட்டை நெல் கிடைக்கும் என்றும், இன்றைய நெல் மார்க்கெட் நிலவரப்படி, 77 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை, பி.பி.டி., நெல், 1,300 ரூபாய் முதல் 1,450 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றார் போல் விற்பனையாகிறது. இதன்படி, ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய், விவசாயிக்கு கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்
வறட்சி நிவாரணமும் , பயிர் காப்பீடும் கொடுக்கப்படாமல் விவசாயிகள் கைவிடப்பட்ட நிலையில், பருவமழை கை கொடுத்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,600 ஏரிகளில், 80 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளன. பெரியபாளையம் அருகே புதுப்பாளையம், கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்ட, தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்
மட்டம் அதிகரித்து, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தாரளமாக கிடைத்ததாக தெரிவித்த விவசாயிகள் , திருக்கண்டலம் அருகே உடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டாததால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டினர்.
செழிப்பான விளைச்சலால், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த மக்களுக்கு , இந்த பொங்கல் சிறப்பு பெற்றுள்ளது . இதே மகிழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து பகுதி விவசாயிகளின் வாழ்விலும் மலர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
source: dinasuvadu.com

Leave a Comment