தமிழ்நாடு என்று பெயர் உருவாகி ஐம்பது ஆண்டு! பொன்விழா கொண்டாட முடிவு ….

 
இன்று நடைபெற்ற  தமிழகச் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் சங்கரலிங்கனார் 75நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்ததைக் குறிப்பிட்டார்.
1967ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், 1969 ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்டார். தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு வரும் 14ஆம் தேதி 50ஆண்டு ஆவதைத் தமிழ்நாடு பொன்விழா ஆண்டாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையொட்டித் தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி ஆகியவை சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டுச் சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
source: dinasuvadu.com
 

Leave a Comment