மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்! தங்கம் தென்னரசு எழுப்பும் 12 கேள்விகள்!

 ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தங்கம் தென்னரசு எழுப்பிய 12 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான 12 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • தொலைக்காட்சிகள் வாயிலாகப் பாடம் நடத்தப்படும் எனில், எத்தனை தொலைக்காட்சிகளில் எந்தெந்த வேளைகளில் எவ்வளவு நேரம் பாடங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன?
  • எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்களுடன் அதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன? தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பங்கு இதில் என்ன?
  • எந்தெந்த வகுப்புகளுக்குத் தொலைக்காட்சி வாயிலாகப் பாடம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றது? பாட வேளைகளுக்கான பாட அட்டவணை தயார் செய்யப்பட்டுவிட்டதா?
  • பள்ளிகள் திறப்பு, வகுப்பறை நடவடிக்கைககள், இந்தக் கல்வியாண்டுக்கானப் பாடத்திட்டங்கள் மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது இறுதிப் பரிந்துரையினை அரசுக்கு அளித்துவிட்டதா?
  • இக்குழு அளித்த இடைக்கால அறிக்கையில் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்தப் பரிந்துரை ஏதேனும் செய்துள்ளதா அல்லது எதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்காமல் முதலமைச்சரை உவகை கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவசர அறிவிப்பாக இதை அமைச்சர் வெளியிட்டு இருக்கின்றாரா?
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த ஆண்டு 30 சதவிகிதம் பாடங்களைக் குறைத்துள்ள சூழலில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முடிவென்ன?
  • இந்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றதா? அதற்கான பாடங்கள் வரையறை செய்யப்பட்டுவிட்டனவா?
  • தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட நேரவரையறைக்குள் நடத்தப்படும் வகையில் ஒவ்வொரு பாடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளனவா? பாடங்களை நடத்த உரிய ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளனரா?
  • அவ்வாறாயின், தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுவதற்கான பயிற்சி ஏதேனும் அத்தகு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றதா?
  • தொலைக்காட்சி வழியே பாடங்கள் நடத்தும் போது மாணவர்களுக்கு இயல்பாக எழும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேரிடையாகக் கேட்டுத் தெளிவு பெற முடியாததாகையால் பாடங்களைப் பொறுத்து மாணவர்களின் ஐயங்களை நீக்கித் தெளிவு படித்த என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன?
  • மாணவர்கள் அதுகுறித்துத் தத்தம் வகுப்பு ஆசிரியர்களிடமே விவாதித்துத் தெளிவு பெற வகை செய்யும் வண்ணம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய ‘ வாட்ஸ்அப்’ குழுக்கள் போன்றவற்றையோ அல்லது வேறு சில முறையான ஏற்பாடுகளையோ மேற்கொள்ள அரசு உத்தேசித்திருக்கின்றதா?
  • ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சி குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா?

என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.