மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் இல்லை – முதல்வர் பழனிசாமி பேட்டி.!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாதடுப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு சார்பில் 18 மற்றும் தனியார் சார்பில் 6 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது என்றும் மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 571 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். தற்போது அரசிடம் தேவையான மாஸ்க்குகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் கையிருப்பில் உள்ளது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளது. கூடுதலாக 2,000 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், நோய் எதிர்ப்புசக்தி மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் இருக்கின்றது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. இந்த கருவிகள் வரும் 9ம் தேதி வந்த உடனே, கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

இதையயடுத்து கொரோனா தடுப்பு நிதி மத்திய அரசிடம் இருந்து முதல்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என கூறினார். மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் இல்லை என்றும் அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வைரஸின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்யாவசிய பொருட்கள் மக்களுக்கு விரைவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நடமாடும் காய்கறி திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடு மற்றும் மாநாடு சென்று வந்திருந்தால் தாங்களாக முன்வந்து தெரிவிப்பது மிகவும் நல்லது. ஏப்ரல் 14க்கு பிறகு கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து 10ம் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்