ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் ! வங்கி ஊழியர்கள் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் வங்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில்  தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு  ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு  ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த  ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று தலிபான்கள் தெரிவித்தனர். எனவே தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானின் அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள  டா ஆப்கானிஸ்தான் வங்கி ஊழியர்கள் 5 பேர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.அவர்களது வாகனத்தை குஷன் மாவட்டம் அகமத் அபாட் என்ற பகுதியில் தடுத்து நிறுத்திய தலிபான் பயங்கரவாதிகள் 5 பேரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.இதனால் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.