பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!

பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்பு குறித்து அறிக்கை ஒன்றினை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் என்றும், சீன விவகாரம் தொடர்பாக தவறான தகவல் தருவது சிறந்த தலைமைக்கு அழகல்ல என்றும், பிரதமர் அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவரது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அவரது அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘43,000 கி.மீ இந்திய நிலப்பரப்பை சீனர்களிடம் சரண்டர் செய்த கட்சியைச் சேர்ந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். யுபிஏ ஆட்சிக்காலத்தில், சண்டையே இல்லாமல் மோசமான வகையில் நமது பிராந்தியம் சரண்டர் ஆனதை பார்த்தோம். இப்போது மீண்டும் நம் படைகளை குறைத்து மதிப்பிடுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும், தயவுசெய்து நமது படைகளை மீண்டும் மீண்டும் அவமதிப்பதையும், வீரர்களின் வீரம் குறித்து கேள்வி எழுப்புவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து தேச ஒற்றுமையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.