நாஞ்சில் சம்பத் அதிரடி முடிவு..!

அ.தி.மு.க.வில் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தினகரன் புதிய கட்சி தொடங்கியதும், கட்சியை விட்டு விலகினார்.

அதன் பிறகு அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும், தமிழ் இலக்கிய மேடைகளில் மட்டுமே பேசுவேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். ஆனால் அவர், தமிழக அரசியல் பற்றியும், அமைச்சர்களின் பேச்சு குறித்தும் அவ்வப்போது, கருத்து தெரிவித்து வந்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் வைகோவை ஒரு இலக்கிய விழாவில் நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வில் சேரப்போவதாக மீண்டும் தகவல் பரவியது.

சென்னையில் வைகோவை நாஞ்சில் சம்பத் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இதற்காக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வைகோ வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி நாஞ்சில் சம்பத்திடம் மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:-

நான், கட்சி அரசியலை விட்டு விலகி விட்டேன். தத்துவ அரசியலில் இருந்து விலகவில்லை. இனம், மொழி சார்ந்த திராவிட இயக்கத்தின் பார்வையில் என் மனதில் பட்டதை சொல்வதில் ஒரு போதும் நான், தயக்கம் காட்டியது இல்லை.

அந்த அடிப்படையில் சில கருத்துக்களை தெரிவித்து வந்தேன். அதனை காரணம் காட்டி நான், அரசியலில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசியபோது, முதல்வரை ஸ்டெர்லைட் நாயகன் என்று கூறினார். இதை என்னால் ஏற்க முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தொடக்கம் முதல் ஆர்வம் காட்டியவர் வைகோ.

22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். எனவேதான் உண்மையான ஸ்டெர்லைட் நாயகன் வைகோதான் என்று என் மனதில் பட்டதை தெரிவித்தேன். இதை காரணம் காட்டி நான் ம.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறினார்கள். அதற்கும் மறுப்பு தெரிவித்தேன்.

அதன் பிறகு சென்னையில் நடந்த இலக்கிய விழாவில் நான், வைகோவை சந்தித்தேன். அவருடன் நலம் விசாரித்து பேசினேன். அவரும் என்னுடன் இயல்பாக பேசினார். அது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது. இதைப் பார்த்தவர்கள் மீண்டும் நான் ம.தி.மு.க.வில் சேரப் போவதாக கூறினார்கள்.

இப்போது வைகோவை அவரது வீட்டில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரப்பி உள்ளனர். நான், வைகோவை சந்திக்கவும் இல்லை. இதற்காக மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு போகவும் இல்லை. அரசியலை விட்டு விலகிய நான், ம.தி.மு.க.வில் மீண்டும் சேர மாட்டேன்.

வைகோ எடுக்கும் முயற்சிகள், அரசியலில் அவர் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நான், தந்தி டி.வி.யில் பயணங்கள் என்ற தொடரில் பேசி வருகிறேன். வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் இந்த தொடர் வெளியாகிறது. பொது வழியில் இலக்கிய ரீதியில் பயணம் மேற்கொள்ள நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

எந்த காரணங்களுக்காகவும் நான், அரசியல் பாதைக்கு திரும்பப்போவதில்லை. இலக்கிய பாதையில் தான் என் பயணம் தொடரும்.

நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவு எண்ணங்கள் கொண்டவர். மதச்சார்பின்மை தத்துவங்களில் நம்பிக்கை கொண்டவர். அந்த வரிசையில் அவர், மதச்சார்பற்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் அவர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து இருக்கலாம். அவரது கருத்தும், சிந்தனையும் பொது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? என்பது போக போக தெரியும்.

கமல்ஹாசனை போல கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தை பா.ஜனதா கட்சியின் முகமாகவே பார்க்கிறேன்.

இப்போதைய அ.தி.மு.க. அரசு மக்களுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் இந்த அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் இந்த ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்.

தூத்துக்குடிக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தாகரத் மீதும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதும் இந்த அரசு வழக்குப் பதிவு செய்தது. இதனை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. கோர்ட்டின் உத்தரவு இந்த ஆட்சிக்கு கிடைத்த அவமானம். இந்த அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.

டி.டி.வி. தினகரன் தொடங்கிய கட்சியை அவர்தான் தூக்கி சுமக்கிறார்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment