சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட 5 வயது குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு!

அம்மை தடுப்பூசி போட்ட 5 வயது குழந்தை,சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்த கோபி – லோகேஸ்வரி தம்பதியின் 5 வயது குழந்தை தனிஷ்கா. குழந்தைக்கு 5 வயதில் போட வேண்டிய அம்மை தடுப்பூசி போடுவதற்காக, லோகேஸ்வரி ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு புதனன்று கொண்டு சென்றார். குழந்தைகள் தடுப்பூசி பிரிவில் ஊசி போடப்பட்ட 10 நிமிடங்களில், தனிஷ்காவுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதோடு, முகமும் வயிறும் வீங்கி குழந்தை மயக்கமுற்றாள். அதிர்ந்து போன லோகேஸ்வரி மருத்துவர்களிடம் காட்டியபோது, அவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆவேசமுற்ற பெற்றோரும் உறவினர்களும், மருத்துவர்களின் அலட்சியமே தனிஷ்காவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பூசி போட்டதால் உயிரிழப்பு நேரிடுவது சகஜம் என மருத்துவர்கள் அலட்சியத்துடன் பதில் கூறியதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

புதனன்றே குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டதாகவும், ஆனால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் பொறுப்பல்ல என எழுதி தருமாறு மருத்துவர்கள் கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அங்கு சேர்க்கப்பட்டிருந்த தஸ்லீமா அகமது என்ற பெண்ணிற்கு, சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அந்த பச்சிளம் குழந்தையை, மருத்துவர்கள் சரியாக கண்காணிக்க தவறியதால், குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment