#WIvSL: ஷாய் ஹோப் அதிரடி சதம்.. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி!

ஷாய் ஹோப்-ன் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா – கருணாரத்னே களமிறங்கினார்கள். தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடிவந்த இவர்கள், பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். இருவரும் அரைசதம் விளாசி அசத்திய நிலையில், 52 ரன்களில் கருணாரத்னே தனது விக்கெட்டை இழந்து வெளியேற, அவரைதொடர்ந்து obs முறையில் குணதிலகா தனது விக்கெட்டை இழந்தார்.

அதனைதொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ் 7 ரன்களில் வெளியேற, 8 ரன்கள் மட்டுமே அடித்து நிசாங்கா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, பண்டாரா 50 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இலங்கை அணி, 49 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ரன்கள் அடித்தது.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப் – எவின் லூயிஸ் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிவந்த நிலையில், ஷாய் ஹோப் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் அசத்தலாக விளையாடிய லூயிஸ் 65 ரன்கள் எடுத்து வெளியேற, 110 ரன்கள் அடித்து ஷாய் ஹோப் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி, 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்து அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.