ஐபிஎஸ் அதிகாரி ரூபா யார்? 20 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட முறை இடமாற்றம்!

உள்துறை செயலாளராக இருந்த  ரூபா தற்போது மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா திவாகர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மிகவும் நேர்மையான ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு கிடைத்த பரிசுதான் இவர் 20 ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட  சசிகலா விதிமுறைகளை மீறி செயல்பட்டதை கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தியவர் இவர்தான். சசிகலாவிற்கு சிறையில் விஐபி சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியில் சென்று சாப்பிங் செய்து வருவதாகவும், இதற்காக சிறைத்துறை காவலர்களுக்கு அவர் பணம் கொடுத்ததும் தெரிய வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் ரூபா மீண்டும் ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால், கர்நாடக மாநில உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராக பதவி ஏற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் ‘நிர்பயா பாதுகாப்பு நகரம் பெங்களூர்’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதில், ரூபாவிற்கும் பெங்களூர் காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஹேமந்த்  நிம்பல்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, டெண்டர் கமிட்டி தலைவராக இருக்கும் நிம்பல்கர் விதிமுறைக்கு புறம்பாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அதற்கு நிம்பல்கர் தன்னுடைய அதிகார வரம்பிற்குள் ரூபா தேவை என்று தலையிடுவதாக பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து, தலைமை செயலாளர் விஜயபாஸ்கருக்கு ரூபா கடிதம் எழுதினார். அதில் தூண்டுதலின் பேரில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கர்நாடக அரசு 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்தது. அதில் ரூபா, நிம்பல்கர் ஆகியோர் அடங்குவர். அதன்படி உள்துறை செயலாளராக இருந்த  ரூபா தற்போது மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ரூபாவின் இடத்தில் மாலினி கிருஷ்ணமூர்த்தி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹேமந்த் நிம்பல்கர் இன்டர்நெட் செக்யூரிட்டி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய பணிக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.