7 பேர் விடுதலை எப்போது..? – ஆளுநர் தரப்பு விளக்கம்.!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் நிலையில், சமீபத்தில், பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என தாய் அற்புதம்மாள்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரறிவாளனுக்கும் கொரோனா தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் இந்த வழக்கு தொடந்தார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் பேரறிவாளனுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தான் 90 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, ஏழு பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்..? உரிய நேரத்தில் முடிவெடுப்பார்கள் என்பதால்தான் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை எனவே 7 பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று ஆளுநரின் செயலர்  தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், பன்னோக்கு விசாரணை ஆணைய இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதால் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan