கைது செய்யும் வரை உடலை எடுத்துச் செல்ல மாட்டோம் – மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம்!

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என்று மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம் கோரிக்கை.

கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் பாட்டீல், எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைக் கைது செய்யாத வரை அவரது உடலை குடும்பத்தினர் எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்று கூறியுள்ளார். கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ், ரமேஷ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தற்கொலைக் குறிப்பில், பாட்டீல் தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என்றும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்