கள்ளச்சாராய விவகாரம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட்!

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இதன்பின் பேசிய அவர், முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றார்.

இந்த நிலையில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்