ஈரான் படகுகளுக்கு எதிராக 30 முறை எச்சரிப்பு துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க கடற்படை கப்பல்கள்!

ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமெரிக்க ரோந்து கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை படகுகளை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் 30 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

பல வருட காலங்களாகவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச கடல் பரப்பிற்கும் ஈரானின் கடற்பரப்பிற்கும்  இடையேயான ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று அமெரிக்க கப்பல்கள் ஈரானின் கடல் எல்லை அருகே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடுவது போல நேற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பாக, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் பின் தொடர்ந்து சென்றுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கப்பல்கள் பயணித்துக்கொண்டிருந்த பொழுது, ஈரான் கடல் எல்லைக்கு அருகே ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுகள் அமெரிக்க கப்பல்களை இடைமறித்து உள்ளதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட ஈரானிய படகுகளும் அச்சுறுத்தும் வகையில் வந்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பாக வந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், ஈரானிய படகுகளை எச்சரிக்கும் வகையில் 30 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் ஈரான் கடற்படை படகுகள் அமெரிக்க கப்பலை விட்டு விலகி சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமாகிய பென்டகன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கப்பல்களை ஈரானிய படகுகள் வழிமறித்ததால், எச்சரிப்பு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal