விளாடிமிர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயன்றதாக ரஷிய அதிபர் மாளிகை கிரெம்ளின் பரபரப்பு குற்றச்சாட்டு. 

அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்யும் நோக்கத்தில் உக்ரைன், அதிபர் மாளிகை கிரெம்ளினில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை ஒரு “திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை” என்று கருதுவதாகவும், தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரஷ்ய பாதுகாப்பு படையால் இரண்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விளாடிமிர் புதினுக்கு காயம் ஏற்படவில்லை, மேலும் கட்டிடங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 கிலோ வெடி பொருட்களுடன் பறந்த ட்ரோன், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே விழுந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெடி பொருட்களுடன் வந்த ட்ரோன் ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்தவே வந்ததாகவே தகவல் வெளியானது.

இந்த நிலையில், தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் முயற்சியில் உக்ரைன் ஈடுபட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பு விவகாரம் தொடர்பாக உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்