துப்பாக்கி சூடு பதற்றம்.! தமிழக – கர்நாடக எல்லை வழியாக போக்குவரத்து நிறுத்தம்.!

கர்நாடக வனத்துறையினர் தமிழகத்தை சேர்ந்த ராஜா என்பவரை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தால், தற்போது பாலாறு வழியாக தமிழக – கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் மெட்டூர் பகுதியை ஒட்டிய தமிழக – கர்நாடக எல்லை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மான்கள் அதிகம். இதனை சிலர் வேட்டையாட பாலாறு ஆற்றங்கரையோரம்  இரண்டு பரிசலில், கர்நாடக மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.

வேட்டை : ரவி, இளைய பெருமாள், ராஜா ஆகிய மூவரும் கர்நாடக மாநில எல்லை பகுதியில் உள்ள  மான்களை தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடியுள்ளனர் என தெரிகிறது. இதனை அறிந்த கர்நாடக வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

உடல் மீட்பு : இதில், ரவி, இளையபெருமாள் பரிசல் மூல தப்பி தமிழக எல்லைக்கு வந்துவிட்டனர். ஆனால், ராஜாவை காணவில்லை. இந்நிலையில், இன்று ராஜாவின் உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக மக்கள் திரளானோர் தமிழக – கர்நாடக எல்லையில் குவிந்துள்ளனர்.

பதற்றம் : வனவிலங்குகளை வேட்டையாடினால் அவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடையுங்கள். ஆனால் இப்படி சுட்டு கொல்லக்கூடாது என அந்த மக்கள் கோரிக்கை வைத்து குவிந்துள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

போக்குவரத்து தடை : இந்த சூழ்நிலையை அடுத்து பாலாறு வழியாக தமிழக – கர்நாடக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாலாறு பகுதி வழியிலான இரு மாநில எல்லை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காவல்த்துறை உயரதிகாரிகள் மற்றும்  அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment