TokyoParalympics:இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம்;நிஷாத் குமார் சாதனை..!

டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில்,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.இதன்மூலம்,ஆசிய சாதனையை படைத்துள்ளார்.மேலும்,இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், உயரம் தாண்டும் போட்டியில் 2 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று,பாராலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.