வரலாற்றில் இன்று…தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யு.போப் பிறந்தநாள்..!

ஜி.யு.போப் வாழ்க்கை :

செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப், அதாவது ஜியார்ஜ் யுக்ளோ போப் ஏப்ரல் 24ம் தேதி 1820ம் ஆண்டு கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜான் போப், கேதரின் போப் ஆவர். அவரது குழந்தைப் பருவத்திலேயே 1826ம் ஆண்டு இங்கிலாந்துக்குக் குடும்பத்துடன் குடியேறினர்.

G-U-Pope
G U Pope File Image

ஜி.யு.போப் படிப்பு:

ஜி.யு.போப் தனது 19 வயது வரை ஹாக்ஸ்டன் என்ற கல்லூரியில் கல்வி பயின்றார். அதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ் மீது பெரும்பற்று கொண்ட போப் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து புறநானூறு, புறப்பொருள்வெண்பாமாலை போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

G-U-Pope 2
G U Pope 2 File Image

தமிழகம் வருகை :

ஜி.யு.போப் 1839ம் ஆண்டு விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். வரும் வழியில் கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றுக்கொண்டார். அதன்பின், வெஸ்லியன் சங்கம் சார்பாகச் சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கி, இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அச்சங்கத்தால் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்திற்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ்நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர் ஜி.யு.போப் ஆவார்.

G-U-Pope 3
G U Pope 3 Image Source flickr

சிறப்பு பெயர் மற்றும் இறப்பு :

ஜி.யு.போப் அவர்களுக்கு வேத சாஸ்திரி, தமிழ் பாடநூல் முன்னோடி மற்றும் செந்தமிழ்ச் செம்மல் என்ற சிறப்பு பெயர்கள் உள்ளன. மேலும், 1871ம் ஆண்டு சில தனிப்பட்ட சூழல் காரணமாகப் பெங்களூர் சென்று அங்குக் கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு அவரது உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 1882ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். தம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்று கூறிய ஜி.யு.போப் 1908ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி இயற்கை எய்தினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.