வரலாற்றில் இன்று (ஏப்ரல் 17 )-தீரன் சின்னமலை பிறந்த தினம் !

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் ஆகும்.
தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் , தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது. 1801-ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804-ஆம் ஆண்டு அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.