வரலாற்றில் இன்று (ஏப்ரல் 13)-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று ஆகும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் உள்ள  தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் – விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.

தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா’வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.