வாழ்க்கையில் கீழே இறங்கிய வரை மேலே ஏற்றி விடும் ‘பாதாள செம்பு முருகன்’ கோவிலின் அதிசயம்..

பல அரசியல்வாதிகளும் நடிகர்களும் அரசு அதிகாரிகளும் ரகசியமாக வந்து செல்லும் இடமாக இந்த செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் சிறப்பை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்… வாங்க…

பாதாள செம்பு முருகனின் சிறப்பு :
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பக்கம் ராமலிங்கம் பட்டியில் இந்த பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 600 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.

” குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் ” என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதாவது முருகன் கோவில் மலை மேல் தான் இருக்கும் என்பார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் மட்டத்திலிருந்து சாமி கீழே இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக இந்த பாதாள செம்பு முருகன் கோவிலும் பூமிக்கு அடியில் இருப்பதால் இதை 2-ம் திருச்செந்தூர் எனவும் கூறுகின்றனர்.

பொதுவாக முருகன் கோவில் என்றாலே மலை மீது ஏறி இறங்க வேண்டும். ஆனால் இவ்விரண்டு இடத்தில் மட்டும் தான் கீழே இறங்கி சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பின்பு மேலே ஏறுவது போன்று இருக்கும். அதனால்தான் வாழ்க்கையில் கீழே இறங்கிய வரை மேலே ஏற்றி விடுகிறார் முருகர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோவில் கிட்டத்தட்ட 16 அடி பாதாளத்தில் செம்பு சிலையுடன் காட்சியளிக்கின்றார். இதனால்தான் இவருக்கு பாதாள செம்பு முருகன் என பெயர் வந்தது.

பரிகாரங்கள்:

ராகு திசை நடப்பவர்களுக்கு முக்கிய ஸ்தலமாக இருப்பது திருநாகேஸ்வரம் ஆகும். அங்கு செல்ல முடியாதவர்கள் இந்த பாதாள செம்பு முருகனை தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தீமைகள் அகலும்.

தற்போது பிரபலமாகி வரும் கருங்காலி மாலைகள் எங்கிருந்துதான் தொடங்கப்பட்டது என சிலர் கூறுகின்றனர். இந்த கருங்காலி மாலைகள் முருகனின் பாதத்தில் பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த கருங்காலி மாலைகளை நாம் அணிவதன் மூலம் நேர்மறையான அதிர்வுகளையும் குறிப்பாக கண் திருஷ்டி போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கருங்காலி மாலைகளை சித்தர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் ,வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர்களுக்கு தானமாக அளித்து வருவது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.

மேலும் இரண்டு மாலைகள் வாங்கி ஒன்று முருகனுக்கு சாத்திவிட்டு மற்றொன்றை நாம் அணிந்து கொண்டு ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து விளக்கு போட்டால் திருமண தடைகள் நீங்கும். எட்டு கருங்காலி மாலைகளை வாங்கி முருகனுக்கு சாத்தி வழிபட்டால் நாம் நினைத்த காரியம் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காரிய சித்தி ஆகும்.

பொதுவாக முருகனின் வேல் வலது கை புறம் இருக்கும். ஆனால் இங்கு உள்ள முருகனின் வேல் இடது கை புறமாக இருப்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். அதேபோல் பைரவர் அனைத்து கோவில்களிலும் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இங்கு சிவன் ஜலகண்டேஸ்வரராக தண்ணீரில் காட்சியளிக்கிறார். பூராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் இந்த ஜலகண்டேஸ்வரரை வழிபட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும் சாஸ்திரங்களில் சொல்லக்கூடிய பத்து கொடைகளில் பசு கொடை மிகவும் சிறந்தது. அந்த வகையில் பசுவை தானமாக இந்த கோவிலுக்கு வழங்கினால் மிக மிக சிறப்பான ஒரு வாழ்க்கையையும் தொழில் முன்னேற்றத்தையும் பாதாள செம்பு முருகன் கொடுப்பார் என்பது ஐதீகம்.

இங்கு கொடுக்கப்படும் விபூதி 18 மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்த விபூதி கிருத்திகை, சஷ்டி, அம்மாவாசை பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே வழங்கப்படும். ஒருமுறை நாம் பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு சென்று சகல செல்வ செழிப்பையும் ஆரோக்கியத்தையும் பெறுவோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.