மீண்டும் பெண்கள் அடக்குமுறையை கையில் எடுத்த தலிபான்கள்.., மீடியாவில் பணியாற்ற பெண்களுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் வேலைக்கு செல்லும் பெண்களை பல இடங்களில் தடுத்து வருவதாக தகவல்.

ஆப்கானிஸ்தானை, தலிபான் அமைப்பினர் முழுமையாக கைப்பற்றியுள்ள விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானை வைத்தியிருந்தது. அப்போது, பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டனர். பெண்கள் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், போர் முடிவுக்கு வந்ததாகவும், பொது மன்னிப்பு கேட்டு, அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதன்பின் முதல் முறையாக ஊடகங்களில் பேசிய தலிபான்கள், யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம் என்றும் பெண்களுக்கு சுதந்திரம் அளிப்போம் என்ற வகையில் தெரிவித்திருந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை, அந்த நாட்டில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

தலிபான்கள் கூறியதற்கு மாறாக தற்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெண்கள் அடக்குமுறையை கையாள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  ஆப்கானிஸ்தான் அரசு ஊடகத்தில் வேலை பார்த்த கொண்டிருந்த பெண் நியூஸ் ரீடர்கள் மற்றும் செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக தாலிபான் செய்தியாளர் அந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போது ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் வேலைக்கு செல்லும் பெண்களை பல இடங்களில் தடுத்து வருகின்றனர் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான ஆர்.டி.ஏ. என்ற டி.வி. நிறுவனம் உள்ளது. இதில் பிரபல செய்தி வாசிப்பாளராக சப்னம் தாரன் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவர் பணிக்கு வரக்கூடாது என்று தலிபான்கள் தடுத்துவிட்டனர்.

இது தொடர்பாக ஷப்னம் தவ்ரன் சமூக வலைதளம் மூலமாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றிய நிலையில் நானும், மற்ற ஊழியர்களும் வழக்கம் போல டிவி நிலையத்துக்கு சென்றோம்.  எங்களுடைய அடையாள அட்டைகளை வாங்கி பார்த்து விட்டு ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தார்கள். ஆனால் என்னையும், வேறு சில பெண்களையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இனி வேலைக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் வீடு திரும்பிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் எனது குரலை சர்வதேச சமுதாயம் கேட்க வேண்டும். எனக்கு உதவி செய்ய வேண்டும். எனது வாழ்க்கையே இப்போது அச்சுறுத்தலில் இருக்கிறது. சர்வதேச சமுதாயம் தான் என்னை காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதைப் பார்த்தால் தலிபான்கள் மீண்டும் பெண்கள் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்