விபத்தில் சிக்கியவரை தன் காரில் மருத்துவமனை அழைத்துச் சென்ற அமைச்சர்..!குவியும் பாராட்டு.!

விபத்தில் சிக்கியவரை தன் காரில் மருத்துவமனை அழைத்துச் சென்ற மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

பெங்களூர் மற்றும் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் 23 வயது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது கார் மோதி  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பூந்தமல்லி அருகே நடந்துள்ளது. சாலையில் காயங்களுடன் துடித்த இவரை பார்த்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. அப்போது அவ்வழியே கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சாலையில் துடித்துக்கொண்டிருந்த இளைஞரை பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து இளைஞருக்கு முதலுதவியை அளித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் வர தாமதமான காரணத்தால் தன்னுடைய காரிலேயே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பூந்தமல்லி மருத்துவமனையில் அடிபட்ட இளைஞருக்கு முதலுதவி சிகிச்சையை அளித்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணையின் மூலமாக அடிபட்டவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் 23 வயது ராஜேந்திரன் என்றும், வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

சாலையில் துடித்துக்கொண்டிருந்த இளைஞரை பலரும் பார்த்துக்கொண்டு சென்றிருந்த வேளையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் முதலுதவி அளித்து அவரது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு முதலுதவி அளித்து முடிக்கும் வரை நின்று பார்த்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சரின் மனிதநேய செயலால் பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.